ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஜேஇஎம் தீவிரவாதியை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத சதி செயலில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்தியாவுக்குள் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான நிதி, ஆயுதங்களை அந்த தீவிரவாத அமைப்புகள் பல்வேறு வழிகளில் பெறுகின்றன. மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பின் உத்தரவின் பேரில் இவர்கள் செயல்படுவது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, போதைப்பொருட்கள், ரொக்கம், ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதில் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபைத் மாலிக், ஜேஇஎம் அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்ததும் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள் உள்ளிட்ட ரகசிய தகவலை அவர்களுடன் பகிர்ந்து வந்ததும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில், முகமது உபைத் மாலிக்கை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.