புதுடெல்லி,
உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான ஊர்ப்புற மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் திட்டமிட்டார் உபேந்திரா சிங்.
இதையடுத்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அந்த மாம்பழத்தை ஆய்வகத்தில் இருந்தவர்களும் சுவைத்தபார்க்கவே, அதன் சுவை மிக வித்தியாசமாக இருந்ததாகவும், பின் அவர்கள் கூடி ஆலோசித்து இதற்கு மோடி என பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து மோடி மாம்பழம் என்ற பெயரில் அதை பதிவு செய்த சான்றிதழை வழங்கியுள்ளது வேளாண் ஆராய்ச்சி கவுன்சில். மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மாம்பழத்தில் லக்னோவின் மாம்பழப் பகுதியான மலிஹாபாத்தில் கிடைக்கும் உலகப் புகழ் பெற்ற மாம்பழ வகையான தஸ்ஸேரியைப் போலவே, நார்ச்சத்தை விட அதிக கூழ் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. லேசான இனிப்பு சுவையுடன் இருக்கிறதென சொல்லப்படுகிறது.
லக்னோவின் இரண்டு உள்ளூர் மாம்பழ வகைகளை இணைத்து இந்த ரக மாம்பழங்களை உருவாக்கியதாக சிங் கூறியுள்ளார். இந்த மாம்பழம் சராசரியாக 450 கிராம் எடை இருக்குமென சொல்லப்படுகிறது.
இந்த மோடி மாம்பழங்களின் 1,000 மரக்கன்றுகள் தற்போது விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றின் விலையும் ரூ. 1,000-த்துக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘இந்த மா மரக்கன்றுகள் வருங்காலத்தில் இன்னும் அதிகம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.