நடிகர் சரத்பாபு, உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹைதராபாத்தில் இன்று காலமானார். அவரது நெருங்கிய நண்பரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சரத்பாபுவின் நினைவலைகளை இங்கே பகிர்கிறார்.
“சரத்பாபுவுக்கும் எனக்குமான நட்பு, வெளியே பல பேருக்கும் தெரியாது. `உச்சக்கட்டம்’ படத்துல இருந்து நாங்க நட்பானோம். இந்தப் பட உலகில் `வாடா போடா’ன்னு என்னை கிண்டல் செய்து திட்டக்கூடிய நண்பராக இருந்தார். ரெகுலராகத் தொடர்பில் இருப்போம். எப்பவும் போன்ல பேசிட்டு இருப்போம். ஹைதராபாத்ல போய் செட்டில் ஆனதால, நேர்ல சந்திக்கற வாய்ப்பு அமையாமல் இருந்துச்சு. நாங்க ரெண்டு சேர்ந்து அமெரிக்காவில் போய், ஒரு தெலுங்கு படம் கூட நடிச்சிருக்கோம். ‘டேய் மகேன்’ ன்னு சொல்லக்கூடிய அற்புதமான நண்பனை இழந்துட்டேன்.
அழகன். நாங்கல்லாம் அவரைப் பார்த்து பொறாமைப்படுவோம். ‘இவ்ளோ அழகா ஒரு முகமும் பிகரும் வச்சிட்டிருக்கே… உன் பக்கத்துல நின்னா எங்களை யார்டா கவனிப்பாங்க’ன்னு அவர்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். அவரும் அதைக் கேட்டு சிரிப்பார். மிகப்பெரிய நடிகர்கள் அத்தனை பேரோடவும் நடிச்சிட்டான். சிவாஜி சார், கமல், ரஜினின்னு பலருடைய முக்கியமான படங்கள்ல நடிச்சிருக்கான். அவனே ஹீரோவாகவும் நிறைய படங்கள் நடிச்சிட்டான். ராஜமௌலி சாரோட ‘மகதீரா’ படத்துல நடிச்சிருக்கான். குழந்தை மனசுக்காரன்.
சமீபகாலமாக அவர் உடல்நலம் சரியில்லைனதும், அவர் சகோதரர்கிட்ட நலம் விசாரிச்சேன். அப்ப அவர் சொன்னது இது. ‘நீங்க எந்த அழகான ஒரு சரத்பாபுவை மனசுல ஞாபகம் வச்சிருக்கீங்களோ, அது அப்படியே இருக்கட்டும் சார். இப்ப அவர் அவதிப்படுறதை பார்க்க வேண்டாம்’ன்னு சொன்னார். வெரி க்ளீன் பர்சன். அவருக்கு ஏன் அவருக்கு இப்படி ஒரு உடல் வேதனையையும், முடிவையும் கடவுள் கொடுத்தார்னு எனக்குத் தெரியல. வேதனையா இருக்கு. `சரத், உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்!. `one by one they all fall!’ அப்படிங்கறது மாதிரி நிறைய நண்பர்கள் இப்படி இந்த படவுலகை விட்டுபோயிட்டே இருக்காங்க. அதுல சரத்பாபு, ஸ்பெஷல் டு மீ. ஒவ்வொரு நண்பராக நம்மை விட்டு பிரியும் போது மனது கனக்கிறது” என்கிறார் மன வேதனையுடன்!