ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் வழியாக சென்ற வேநாட் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் உள்ள செரியநாடு ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுவிட்டதால் ஓட்டுநர் அந்த ரயிலை 700 மீட்டர் பின்னோக்கி இயக்கி பயணிகளை ஏமாற்றாமல் ஏற்றிச் சென்ற சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.
செரியநாடு ரயில் நிலையம் என்பது ஆலப்புழா மாவட்டத்தில் மாவேலிக்கரா மற்றும் செங்கனூர் இடையே உள்ள சிறிய ரயில் நிலையம்.
இன்று காலையில் இந்த ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய வேநாட் எக்ஸ்பிரஸ் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. அங்கு சிக்னலும் போடப்படவில்லை, ஸ்டேஷன் மாஸ்டரும் இல்லாத காரணத்தால் ரயில் நிற்காமல் சென்றதாகத் தெரிகிறது.
இதனால் ரயில் அந்த ரயில் நிலையத்தை கடந்து செல்ல சில நிமிடங்களில் ரயிலின் ஓட்டுநர் செரியநாடு ரயில் நிலையத்தில் நிற்காமல் கடந்துவிட்டதை புரிந்துகொண்டார். உடனடியாக ரயிலை பின்னோக்கி 700 மீட்டர் இயக்கி செரியநாடு ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.
ரயில் நிற்காமல் போனது பற்றி எவ்வித புகார்களும் எழும் முன்னரே அவர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.