ஹைதரபாத்: Vishnu Manchu (விஷ்ணு மஞ்சு) நடிகர் மஞ்சு விஷ்ணு மலைபோல் குவிந்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவரது மகன் விஷ்ணு மஞ்சு ஆவார். இவரும் திரைப்படங்களில் நடிக்கிறார். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பல துறைகளில் இயங்கிவருகிறார்.
மஞ்சு விஷ்ணுவின் படங்கள்: 1985ஆம் ஆண்டு வெளியான ராகிலே குண்டுலு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஷ்ணு மஞ்சு. அதன் பிறகு கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விஷ்ணு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. அதன் பிறகு அவர் கேம், தீ, கிருஷ்ணார்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தயாரிப்பாளர் அவதாரம்: நடிகராக மட்டுமின்றி 24 ப்ரேம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளராகவும் திகழ்கிறார். இதுவரை அந்த நிறுவனத்தின் சார்பாக வஸ்டாடு நா ராஜு, டெனிகானா ரெடி, தூசுகெல்தா உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணு மஞ்சு கடைசியாக கின்னா என்ற படத்தில் நடித்தார். மொசக்லு என்ற படத்துக்கு கதையையும் எழுதியிருக்கிறார் விஷ்ணு மஞ்சு.
விஷ்ணு மஞ்சுவின் சர்ச்சையான ட்வீட்: இந்நிலையில் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புகைப்படத்தை பகிர்ந்து, நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார் என கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் விவாத பொருளானது.
சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்: இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிஷோரை வைத்து நகைச்சுவைக்காக சொன்னதை சில புதிய ஊடகங்கள் தவறாக திரித்திருக்கின்றன. கிஷோருக்கும் எனக்கும் எப்போதும் இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள் நடக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்குமே தெரியும். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு இது நகைச்சுவை என்பது புரியும். இதை நகைச்சுவை என்று புரிந்துகொள்ளாதவர்களின் ஆன்மாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும்பாலானோரிடத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துவருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.