யாழ். பல்கலைக்கழகத்தில் கையாடல்: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்..!


யாழ்ப்பாண பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பொருட்கள் கையாடப்பட்ட விவகார விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள்
ஏற்பட்டுள்ளன.

கையாடப்பட்ட பொருள்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட
பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிக்கையிட்டிருந்தாலும், அது 20
இலட்சங்களைக் கடந்திருக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் சிலர்
சந்தேகம் தெரிவித்துள்ளதாக எமது  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் முறையான விசாரணைகளை உடனடியாக
ஆரம்பிக்கவேண்டும் என பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய பேரவை நியமனம்

இந்தக் கையாடல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கெனப் பேரவையால் அமைக்கப்பட்ட
விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் விசாரணைகளில் பங்குபற்றாமல்
வெளியேறியிருப்பதையடுத்து கையாடல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்குப்
புதிதாக இரண்டு உறுப்பினர்களைப் பல்கலைக்கழகப் பேரவை நியமித்துள்ளது.

கையாடல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதியுடன் நேரடித் தொடர்பு இல்லாத
உறுப்பினர்களைக் கொண்டு பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்
நேற்றுமுன்தினம் (20.05.2023) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் 3 இலட்சத்து 75
ஆயிரம் பெறுமதியான பொருட்கள் காணாமற்போயுள்ளதாகப் பராமரிப்புப் பகுதியின்
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு
அறிவிக்கப்பட்டதுடன், அந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட
விசாரணைகளின் அடிப்படையில் களஞ்சியசாலைப் பணியாளர்கள் சிலர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கையாடல்: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்..! | Police Investigation Theft In Jaffna University

பூர்வாங்க விசாரணை

சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் தவறை மறைப்பதற்காக கீழ்நிலைப் பணியாளர்கள்
மீது குற்றஞ்சாட்டப்படுவதாகவும், சம்பவத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்களே
பூர்வாங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள்
சுட்டிக்காட்டி வந்தன.

இது தொடர்பாகப் பல்கலைக்கழகப் பேரவை
உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்கங்கள் தெரியப்படுத்தியிருந்தன.

இதனிடையே, கடந்த (25.05.2023)ஆம் திகதி கூடிய பேரவை, பூர்வாங்க விசாரணை
அறிக்கையின் அடிப்படையில் களஞ்சியசாலைப் பொறுப்பாளர் ஒருவரை விசாரணைகள்
முடிவுறும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தியதுடன், சம்பவம் தொடர்பில்
அவருக்குக் குற்றப் பத்திரிகையையும் அனுப்பியிருந்தது.

முறையான விசாரணைகளை
மேற்கொள்வதற்கென மூவர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தது குற்றஞ்சாட்டப்பட்ட
களஞ்சியசாலைப் பணியாளர், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளிலும்
இவர் தனது பக்கக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

விசாரணைக் குழுவுக்குப் பேரவையால் மார்ச் 25ஆம் திகதி
நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மே மாதம் 8ஆம் திகதியிடப்பட்டு
10ஆம் திகதி உரியவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழகத்தில் கையாடல்: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்..! | Police Investigation Theft In Jaffna University

பதவி விலகிய தலைவர்

காலந்தாழ்த்திக் கடிதம்
அனுப்பப்பட்ட காரணத்தால், தன்னால் விசாரணைகளை மேற்கொள்ளமுடியாத நிலையில்
இருப்பதாகவும், மே 12ஆம் திகதி தான் பிரிட்டனுக்குப் பயணப்பட இருப்பதால்
விசாரணைக் குழுவில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் அந்த அதிகாரி பல்கலைக்கழக
நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தார்.

அதேநேரம் விசாரணைக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர் வேறு காரணங்களால்
விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த (20.05.2023)ஆம் திகதி இடம்பெற்ற பேரவைக்
கூட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் தலைமையில், இலங்கை மின்சாரசபையின்
பொறியியலாளர் ஒருவரையும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளரையும்
உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத இருவர் பூர்வாங்க விசாரணைகளை
மேற்கொள்வதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பராமரிப்புப்
பகுதியின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க விசாரணை வறிதானதாகக்
கருதப்படுகிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பூர்வாங்க விசாரணைகளின் போதும், அதன்
அடிப்படையில் தொடரப்படவுள்ள முறையான விசாரணைகளின் முடிவில் இன்னும் பல
திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்பதோடு இந்தக் கையாடலுடன் தொடர்புடைய
முக்கியமான சந்தேகநபர்கள் தெரியவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.