போபால்: கர்நாடக தேர்தல் வெற்றியை அடுத்து, மத்தியப் பிரதேச வாக்காளர்களுக்கும் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளது. கர்நாடகத்தில் 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது போன்று மத்தியப் பிரதேசத்துக்கும் 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும், பெண்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை கர்நாடகாவில் நிறைவேற்றினோம்; அதை மத்தியப் பிரதேசத்திலும் நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 12ம் தேதி பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். நர்மதா நதியில் பூஜை செய்து பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், பின்னர் ஜபல்பூரில் பேரணியில் பங்கேற்க இருக்கிறார். இதனிடையே, இந்த தேர்தலை மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்றும் அவர்தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் பாஜக-வுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியதை அடுத்து, கடந்த 2020 மார்ச் முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.