Neeraj Chopra: நீரஜ் சோப்ரா ஆண்களுக்கான ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி ஏறிதல் தரவரிசை பட்டியல் இன்று வெளியான நிலையில், முதல்முறையாக அதில் முதலிடத்தை நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். அதுதான், ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் ஆகும், அதனை பெற்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதனால், அவர் இந்தியாவின் தங்க மகன் என்றழைக்கப்படுகிறார்.
உலக தடகள அமைப்பு வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் நீரஜ் தற்போதைய உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார். 25 வயதான சோப்ரா தனது 2023 சீசன் தொடக்க நிகழ்வில் மே 5 அன்று தோஹாவில் நடந்த மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் முதல் லெக்கில் தங்கம் வென்றார். இந்த சீசனில் அவரது முதல் முயற்சி 88.67 மீட்டர் ஆகும். சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே தனது தனிப்பட்ட சிறந்த மற்றும் தேசிய ஈட்டி எறிதல் சாதனையான 89.94 மீட்டர்களைத் தொடும் தூரத்தில் வந்தார்.
நீரஜ் அடுத்ததாக ஜூன் 4ஆம் தேதி நெதர்லாந்தின் ஹெஞ்சலோவில் நடக்கும் ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் கேம்ஸ் மற்றும் ஜூன் 13ஆம் தேதி பின்லாந்தில் துர்குவில் நடக்கும் பாவோ நூர்மி கேம்ஸ் ஆகியவற்றில் விளையாட உள்ளார்.
சீசன் தொடங்குவதற்கு முன்பு நடந்த ஒரு உரையாடலில், நீரஜ் தனது கவனம் உடனடி இறுதி இலக்கில் உள்ளது என்று கூறினார். அதாவது 2024ஆம் ஆண்டில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் ஆகும். “நான் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும். எனது முதல் ஒலிம்பிக் சிறப்பாக இருந்தது, ஆனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பாரிஸ் 2024இல் என்னிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். என் கையில் இருப்பதில் 100% டோக்கியோவுக்காக நான் செய்ததை விட கடினமாக பயிற்சி செய்வேன், “என்று நீரஜ் கூறினார். இறுதியில் நீரஜ் சோப்ராவிடம் 90 மீட்டரை எட்டுவது குறித்து கேட்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் இருந்தே அவரிடம் இந்த கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
அதற்கு அவர் அளித்த பதில்,”கேள்வி ஒன்றுதான், என்னுடைய பதிலும் ஒன்றுதான். நான் அதீத தன்னம்பிக்கையுடன் இல்லை, 90 மீட்டர் இலக்கை கடக்க எந்த அழுத்தமும் இல்லை. நான் ஒருபோதும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், இந்த சீசனில் நான் சிறப்பாக செயல்படுவேன்,” என்று அவர் கூறினார். “கடந்த சீசனில் நான் 6 செமீ குறைவாக வீசினேன். 90 மீ கிளப், ஈட்டி உலகில் மிகவும் பிரபலமானது. இந்த சீசனில் நான் கிளப்பில் நுழைவேன் என்று நம்புகிறேன். எனது முக்கிய இலக்கு நிலையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.