பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக 64 சதவிகிதம் இருக்கும் மேதி (Meitei) சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் விதமாக, பழங்குடியினரல்லாதோரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மாநிலத்தில் 40 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் நாகா, குக்கி பழங்குடியினரிடையே பெரும் எதிர்ப்பைத் தூண்டியது.
அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பழங்குடிகளின் போராட்டம் கலவரமாக வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே அரசு கலவரக்காரர்களைச் சுட உத்தரவிட்டதும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் கலவரச்சூழல் உருவாகியிருக்கிறது.
முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இருவர் உட்பட ஆயுதம் ஏந்திய 3 பேர், கடைகளை அடைக்குமாறு மக்களை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதன் காரணமாக அவர்களை அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் கைதுசெய்திருக்கின்றனர்.
இது தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “துப்பாக்கியுடன் கடைக்காரர்களை மிரட்டிய முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 3 பேரை அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை பிடித்து மாநில காவல்துறையிடம் ஒப்படைத்தது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.