கல்விக்காக தங்க நகைகளை விற்கும் அவலம்.. தனியார் பள்ளிகள் அட்டூழியம்.. திமுக கூட்டணி கட்சி சாடல்.!

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சியான மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தனியார் பள்ளிகள் கட்டண விகிதங்களை முறைப்படுத்த வேண்டுமென மாணவர் இயக்கமும், பெற்றோரும் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த பின்னணியில், தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 2011 ஆம் ஆண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்கிறது.

இப்போது நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமையில் செயல்பட்டுவரும் குழுவின் கட்டண அறிவிப்பு சம்பந்தமான முடிவு வரவுள்ள சூழலில், புதிய விகிதங்களை நிர்ணயித்து உடனடியாக வெளியிட வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

கோவை மாநகரத்தில் பள்ளி கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்காக பெற்றோர்கள் தங்களின் தங்க நகைகளை விற்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, நியாயமான கட்டண விகிதத்தை உடனடியாக நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 25 சதவீதம் பேர் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே வழங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் எந்த கூடுதல் தொகையும் வசூலிக்கப்படக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிப்பட்ட சூழலில், அனைத்து பெற்றோரிடத்திலும் அதிக கல்வி கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவும், அரசின் கட்டண விகிதங்களை வெளியிடுவதுடன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு உரிமையை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், தனியார் பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அரசு ஆய்வுக்கு உட்படுத்தி நியாயமான கல்விச் செயல்பாட்டை உறுதி செய்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்’’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.