புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுகளை அடையாள ஆவணம் இல்லாமல் மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆதார் போன்ற அடையாளச் சான்றும் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வாறு அனுமதிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக பிரமுகரமான அஷ்வினி உபாத்யாய் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் அந்த மனுவில், “ரூ.2,000 நோட்டுகளை எந்த ஆவணமும், அடையாள அட்டையும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை திரும்பப்பெறவேண்டும். இந்த அறிவிப்பு தன்னிச்சையானது, முரண்பாடானது. பெரும்பாலான இந்தியர்கள் வசம் ஆதார் அட்டை உள்ளது. இந்தியக் குடும்பங்களில் வங்கிக் கணக்கு இல்லாதோர் மிகக் குறைந்தவரே. அப்படியிருக்க எதற்காக ஆதார் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா ஷர்மா மற்றும் நீதிபதி சுப்ரமோணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனவே, மே 23-ம் தேதி (நாளை) முதல் செப்.30 வரை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாளொன்று ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இந்நிலையில், நேற்று எஸ்பிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகிவரும் நிலையில் பாஜக சார்புடைய வழக்கறிஞர் ஒருவரே தேசிய வங்கியான எஸ்பிஐ-யின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.