திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54.36 லட்சம் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதாணி சுவாமி கோயிலில் மாதம் ஒரு முறையும், திருவிழாக் காலங்களில் இரு முறையும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது.
அதன்படி, இன்று (மே 22) இணை ஆணையர் நடராஜன் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், கோயில் அலுவலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் காணிக்கையாக ரூ.54 லட்சத்து 36 ஆயிரத்து 192, தங்கம் 45 கிராம், வெள்ளி 18,965 கிராம் மற்றும் 76 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதேபோல், நவதானிய காணிக்கை உண்டியலும் திறக்கப்பட்டு, காணிக்கையாக வந்த நெல், மிளகாய், முந்திரி, நிலக்கடலை, பயறு வகைகளை பிரித்து மூடையிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த நவதானியங்கள் ஏலம் விடப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.