சென்னை: திரைப்பட இயக்குநரும், கவிதை ஆர்வலருமான லிங்குசாமி நடத்திய ‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ’ போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்று முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 பரிசுத்தொகைகளைப் பெறும் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கவிதைகள் மீதும் குறிப்பாக ‘ஹைக்கூ’ என்னும் குறுங்கவிதை வடிவத்தின் மீதும் மிகுந்த பற்றுகொண்ட லிங்குசாமி ‘ஹைக்கூ’ கவிதை வடிவத்தில் முத்திரை பதித்து அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கிய மறைந்த கவிஞர் அப்துல் ரகுமானின் பெயரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘ஹைக்கூ’ கவிதைப் போட்டியை நடத்தியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் ஹைக்கூ கவிதை வடிவத்தை மேலும் பரவச் செய்வதே இந்தப் போட்டியின் முதன்மை நோக்கம் ஆகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு போட்டிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ‘ஹைக்கூ’ குறுங்கவிதைகள் அனுப்பப்பட்டிருந்தன. வெவ்வேறு நடுவர் குழுக்களின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெறும் கவிதைகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.
செங்கை சா.கா.பாரதிராஜா எழுதிய,
‘வானத்துச் சூரியனை சிறிது தூரம் சுமந்து செல்கிறாள்
தயிர் விற்கும் பாட்டி’ என்கிற கவிதை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பட்டியூர் செந்தில்குமார் (துபாய்) எழுதிய,
‘மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம்கேட்கும் மணியோசை’ என்ற கவிதை இரண்டாம் பரிசையும்,
நாமக்கல் அன்வர் ஷாஜி எழுதிய,
‘மந்தையிலிருந்து தவறிச் செல்லும் ஒற்றை ஆட்டின் பாதைசரியாகவும் இருக்கலாம்’ என்ற கவிதை மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளன.
இவற்றைத் தவிர ஏற்கெனவே அறிவித்திருந்தபடி போட்டிக்கு அனுப்பியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1,000 பரிசு அளிக்கப்படும்.
பரிசளிப்பு விழா ஜூன் 2-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு தொடங்கும். போட்டியில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற கவிதைகளையும், ரூ.1,000 பரிசு பெறும் 50 கவிதைகளையும் தொகுத்து, பரிசளிப்பு விழாவில் டிஸ்கவரி பதிப்பகம் வாயிலாக நூலாக வெளியிடப்பட உள்ளது.