ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் விபத்தில் சிக்கிய மோட்டார் பைக்குடன் அரசு பஸ் ஒன்று சுமார் 12 கி.மீ. சென்றது. இதில் பைக் ஓட்டி வந்தவர் உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உ.பி. போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று ஜி.டி. சாலையில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு ஓட்டல் அருகில் விகாஸ் வர்ஷ்னே (32) என்பவர் சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அதன் அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேகமாக வந்த அரசு பஸ் அவரது பின்னால் மோதியதில் விகாஸ் வர்ஷ்னே சில மீட்டர் தூரம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே மோதிய வேகத்தில் மோட்டார் பைக், பஸ்ஸில் சிக்கியது. அந்த பைக்குடன் அந்த பஸ் 12 கி.மீட்டருக்கு தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக 40 வினாடிகள் ஓடும் வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இறுதியாக அந்த பஸ் ஓரிடத்தில் போலீஸார் அமைத்திருந்த வேகத் தடைக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டது.
போதையில் ஓட்டுநர்: பஸ் ஓட்டுநர், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.