டப்ளின் (அயர்லாந்து): ஐரோப்பிய யூனியனுக்கான ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (டிபிசி) தெரிவித்துள்ளதாவது:
பேஸ்புக்கில் ஐரோப்பிய யூனியன் பயனாளர் குறித்த தகவல்களை கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு வழங்கிவந்தது அயர்லாந்தில் உள்ள மெட்டாவிடம் டிபிசி நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி மெட்டா நிறுவனம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஐரோப்பிய யூனியன் பயனாளர் டேட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்காக ஐரோப்பிய டேட்டா புரடெக்ஷன் போர்டு (இடிபிபி) மெட்டா நிர்வாகத்துக்கு ஒட்டுமொத்தமாக 1.2 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,761 கோடி) அபராதம் விதித்துள்ளது. இவ்வாறு டிபிசி தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் கூறுகையில், “ ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. முற்றிலும் குறைபாடுடையது. பிறநிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மெட்டா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய யூனியன் அபாரதம் விதித்ததை எதிர்த்துமேல் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளோம். இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவுக்குள் நீதிமன்றம் மூலம் தடைகோருவோம் என்று மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக், தலைமை சட்ட அதிகாரி ஜெனிபர் நியூஸ்டெட் ஆகியோர் வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளனர்.