கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் போகும் இளம்பெண்கள், உள்தாழிடப்பட்ட பொதுக்கழிப்பறைகளில் சயனைடு சாப்பிட்டு மர்மமாக மரணித்துக் கிடக்கிறார்கள். திருமணக் கோலத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்படும் அப்பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையாளி யார், மோட்டிவ் என்ன என ட்விஸ்ட்டுகள் வைத்து சஸ்பென்ஸை உருவாக்கும் சீரியல் கில்லர் குறித்த வெப்சீரிஸ்தான் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியாகியிருக்கும் ‘தஹாத்’ (Dahaad).
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஐ அஞ்சலியாக சோனாக்ஷி சின்ஹா. இன்ஸ்பெக்டர் தேவிலால் சிங்காக குல்ஷன் தேவய்யா, சீரியல் கில்லர் ஆனந்தாக விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். (கொலையாளி யார் என்பதை முதலிலேயே காட்டிவிடுவதால், இது ஸ்பாய்லர் இல்லை). பிற்போக்கான மண்ணு பொண்ணு கலாசாரம், தண்டவாளத்து கொலை முயற்சி, சாதிய மதவாதிகளின் காதல் எதிர்ப்பு போராட்டம் என இந்தியாவில் தினந்தோறும் அரங்கேறும் காட்சிகளைத் திரையில் தைரியமாக விமர்சிக்கிறது இந்தத் தொடர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் மண்டாவா நகரின் கிராமங்கள்தான் கதைக்களம். வீட்டை விட்டு ஓடிப்போய் பதிவுத் திருமண ஏற்பாடு செய்கிறது ஒரு காதல் ஜோடி. ஆதிக்கச் சாதியான பெண்ணின் தந்தை, தனது மகளை ஒரு முஸ்லிம் இளைஞன் கடத்திச் சென்றுவிட்டான் என்று காவல்நிலையத்துக்கு புகார் அனுப்பிவிடுகிறார். அவரது வீட்டுக்கேச் சென்று வாக்குமூலத்தைப் பெற்று விசாரணையைத் தொடங்குகிறது போலீஸ். தீவிர விசாரணை நடந்துக்கொண்டிருக்கும்போதே, அந்தப் பதிவுத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, முஸ்லிம் இளைஞரைக் காவல்நிலையத்துக்கே இழுத்துவந்து, கடத்தல் வழக்கில் கைது செய்யச்சொல்லி அழுத்தம் கொடுக்கிறது பெண்ணின் தரப்பு.
ஆனால், அதே காவல்நிலையத்தில் திருமண வயதிலுள்ள தனது தங்கையைக் காணவில்லை என்று புகார் கொடுத்துவிட்டு தினமும் கண்ணீரோடு நடையாய் நடந்துகொண்டிருக்கும் பட்டியலின சமூகத்து இளைஞனை “உன் தங்கச்சி எவன் கூடயாவது ஓடி போயிருப்பா… அதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது, போ” என்று அலட்சியப்படுத்தி விரட்டிவிடுகிறது போலீஸ். இப்படிச் சமூகத்தில் நிலவிக்கொண்டிருக்கும் சாதிய, ஆதிக்க முரண்பாடுகளைக் கொண்டுதான் ஆரம்பிக்கிறது முதல் எபிசோடு.
தங்கையைத் தேடிக் கண்டுபிடிக்க வேறு வழியில்லாமல் அந்த ஏழ்மையான இளைஞர் சொல்லும் ஒற்றைப் பொய்யால்தான் திரைக்கதையின் வேகம் கூடி, த்ரில்லராக கியரை மாற்றுகிறது. அந்த இளைஞனின் தங்கை சடலமாக மீட்கப்பட, அதனைத் தொடர்ந்து அதே பாணியில் மர்மமான முறையில் சடலமாகக் கிடக்கும் 27 இளம்பெண்கள் என்பதாக அந்தப் பட்டியல் நீள்கிறது. இப்படி இத்தனை இளம்பெண்கள் காணாமல் போனபிறகும்கூட கண்டுகொள்ளப்படாததற்கு என்ன காரணம், எஸ்.ஐ சோனாக்ஷி சின்ஹா கொலையாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த ‘Dahaad’ வெப் சீரிஸின் கதை.
காவல் அதிகாரியாக சோனாக்ஷி சின்ஹா, காக்கி உடையில் கம்பீரமாக அதிரடி காட்டிருக்கிறார். பட்டியலின சமூகத்துப் பெண்ணாக அவர்களது வலிகளை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். வரதட்சணைக் கொடுக்கமுடியாத, குறிப்பிட்ட சமூகத்து இளம்பெண்களைக் குறிவைக்கும் சீரியல் கில்லர் மீது காட்டும் கோபத்தைவிட, ‘கல்யாணம் ஆகிடுச்சா’ என்று டார்ச்சர் செய்து இளம்பெண்கள் ஓடக் காரணமாக இருக்கும் இச்சமூகத்தின் மீதுதான் பெருங்கோபத்தை வெளிப்படுத்துகிறார் சோனாக்ஷி.
யார் காலிலும் விழக்கூடாது என்கிற கெத்து, எதையும் துணிச்சலாக எதிர்க்கும் மனப்பான்மை, காக்கி உடை, கூலிங் க்ளாஸ் என ஸ்டைலாக புல்லட்டில் வலம்வரும் தில், காணாமல் போன இளம்பெண்கள் மீதான அக்கறை, அதைக் கண்டுபிடிக்க அவர் காட்டும் பேரார்வம் எனப் பார்வையாளர்களை ஈர்க்கிறார். தனது அப்பாவைப்போலவே குணம் கொண்ட இன்ஸ்பெக்டரை அவருக்கே தெரியாமல், ஏன் பார்வையாளர்களுக்குக்கூட தெரியாமல் சோனாக்ஷி மின்னல் வேகத்தில் விடும் அந்த லுக், செம்ம க்யூட்! இருந்தும் இன்ஸ்பெக்டராக வரும் குல்ஷன் தேவய்யாவுக்கும் சோனாக்ஷிக்குமான உறவை மிகவும் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள். இருவருக்குள்ளும் இருக்கும் ஏக்கங்கள், தவிப்புகளை அவர்களே வெளிப்படுத்திக்கொள்ளாமல் பார்வையாளர்களிடம் நுட்பமாகக் கடத்திவிடுகிறார்கள்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பொறுமையோடும் நிதானத்துடனும் கையாளும் நேர்மையான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நேர்த்தியான முகபாவனையோடு நடித்திருக்கிறார் குல்ஷன் தேவய்யா. அதுவும், சோனாக்ஷி மீது இருக்கும் க்ரஷ்ஷை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒரு சீனியர் ஆபிஸராகக் கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிப்பு, சகப்பணியாளராக துணை நிற்கவேண்டிய நேரத்தில் அரவணைப்பு எனச் சரியான அணுகுமுறையுடன் நடத்தும் அவரது இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இந்தத் தொடரின் பெரிய ப்ளஸ். இன்ஸ்பெக்டராக மட்டுமல்ல, மகளைத் தைரியமானவளாக வளர்ப்பது, மகனிடம் நெருங்கிய நண்பனாகப் பழகுவது, மனைவியைச் சமாளிப்பது என வீட்டிலும் ஸ்கோர் செய்கிறார்.
சீரியல் கில்லர் பேராசிரியர் ஆனந்தாக வரும் விஜய் வர்மா, அமைதியான நடிப்பிலேயே மிரட்டி எடுத்துவிடுகிறார். அம்மாவின் நினைவுநாளில் அவரது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அப்பாவைத் திரும்பிப்பார்க்கும் காட்சி கனப்பொழுதில் கடந்து சென்றாலும் பின்னணியில் இருக்கும் காரணத்தை அப்போதே சொல்ல முயற்சி செய்கிறது திரைக்கதை. அதுவும், மனைவியின் காதலனை அவர் டீல் செய்யும் காட்சி பகீர். ’காரண காரியம் இன்றி எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா’ என்பதுபோல், காட்சிக்குக் காட்சி அவர் செய்யும் காரியங்கள் காரணத்தோடே நடக்கின்றன. தனது குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர் போகும் எல்லை நமக்குமே ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது.
எஸ்.ஐ சோனாக்ஷி சின்ஹாவிடம் ‘ஜொள்ள’ முயற்சி செய்து பெருந்தோல்வி அடைவது, இன்ஸ்பெக்டர் மீதான பொறாமையை வெளியில் காட்டிக்கொள்ளமுடியாமல் உள்ளுக்குள் புழுங்கி புழுவாகத் துடிப்பது என காமெடிக்கான குறையைத் தீர்த்திருக்கிறார் எஸ்.பியாக நடித்திருக்கும் ராஜீவ் குமார்.
‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் தவறான அரசியலால் பிரிவினையை ஏற்படுத்தும் இவ்வேளையில், ஒரு பாலிவுட் படைப்பு உண்மையான சமூகப் பிரச்னையைக் கையில் எடுத்து அதைச் சரியான அரசியல் புரிதலுடன் அணுகியிருக்கிறது. அதற்காகவே இயக்குநர்கள் ரீமா கக்தியையும் ருச்சிகா ஓபராய்யையும் பாராட்டலாம். கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும் பெரும்பாலும் பெண்களே பங்காற்றியிருப்பது கூடுதல் ஹைலைட். அதனாலேயே, பெண்களின் பிரச்னைகளை, வலிகளை, உளவியலை அப்படியே அழுத்தமாகக் காட்டியிருக்கிறது இந்தத் தொடர். குறிப்பாக, பெண் போலீஸ் நாயகி, சீரியல் கில்லரைப் படிப்படியாக நெருங்குவது த்ரில்லான திரைக்கதை வார்ப்பு.
கெளரவ் ரெய்னா மற்றும் தரனா மர்வாவின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். சீரியல் கில்லர் கதையில் கூடுதல் திகிலூட்டி மிரட்டுகிறது. குறிப்பாகக் கொலைகாரன் உலாவும் காட்சிகளில் கிலியடிக்க வைக்கிறது பின்னணி இசை.
முதல் எபிசோடிலேயே சீரியல் கில்லரைக் காண்பித்துவிட்டாலும் அடுத்தடுத்த எபிசோடுகளிலும் ஆர்வத்தைத் தக்க வைக்கும் அளவு திரைக்கதை சுவாரஸ்யமாகவே நகர்கிறது. தமிழ்த் திரைப்படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ’நான் அவனில்லை’, ’மன்மதன்’ ரக திரைக்கதை போலவே இது இருந்தாலும் அந்தப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களையே குற்றவாளிகளாக்கி கூண்டில் ஏற்றின. ஆனால், ‘Dahaad’ அதிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறது. சாதிய, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்சமூகத்தைத்தான் அது கேள்வி கேட்கிறது.
மர்மமான முறையில் பெண்கள் மரணித்துப்போவதில் புதிய யுக்தியைக் கையாண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள். அதுவும் கில்லரின் டார்கெட், கில்லர் பயன்படுத்தும் செல்போன் டெக்னிக் எல்லாமே மிரட்டல். காவல்துறையினரின் குடும்பப் பின்னணிகளோடு திரைக்கதையை அமைத்திருப்பதும் கூடுதல் ப்ளஸ். பாராட்ட இத்தனை விஷயங்கள் இருந்தாலும் திரைக்கதையில் மைனஸ்களும் உள்ளன.
இவர்தான் கொலையாளி என்று ஆதாரப்பூர்வமாகவும் ஆவணப்பூர்வமாகவும் தெள்ளத் தெளிவாக உறுதியான பின், ஆறாவது எபிசோடிலேயே கதை முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், அப்போதே தொடரை முடிக்கவும் செய்யாமல், அதற்குப் பின்னர் பதைபதைப்பையும் கூட்டாமல், அலைந்து திரிந்து ஓரமாய் உட்கார்ந்துவிடுகிறது திரைக்கதை.
சாதிய வன்மத்தைச் சொல்லும் திரைக்கதையில் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய காவல்துறையினரே சாதிய வன்கொடுமைக்கு ஆளாகும்போது நடவடிக்கை எடுக்காமல் பாடம் மட்டுமே நடத்திக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் பொறுமையை இழக்கவைக்கிறது. இதையெல்லாம் தாண்டி, கொலைகளுக்கான காரணமும் பெரிதாக அலசப்படாமலேயே முடிந்துவிடுகிறது. அதேபோல 27 பெண்கள் வீட்டைவிட்டு ஓடியிருக்க, பெரும்பாலான குடும்பங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமலே இருக்கிறார்கள் என்பதும் நம்பும்படியாக இல்லை.
ஆனாலும், க்ரைம் த்ரில்லர் ஜானரில் வழக்கமான கொலை, புலனாய்வு என்று மேம்போக்காக இல்லாமல், பெண்களைத் துரத்தும் வரதட்சணைக் கொடுமைகள், திருமண நெருக்கடிகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள், மத அரசியல் என சமூக பிரச்னைகளையும் துணிச்சலாக எடுத்துரைப்பதால் `Dahaad’ இந்திய அளவில் ஒரு முக்கியமான ஓ.டி.டி படைப்பாகிறது.