நடிகர் சரத்பாபு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் மறைந்த பழம்பெரும் நடிகர் நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார்.
தீபக் நம்பியார், நம்பியாரின் மகள் சிநேகாவின் மகன்.
சிநேகாவுக்கு முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாக, அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்தவர் தீபக். அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு நடிகர் சரத்பாபுவுக்கும் சிநேகாவுக்கும் நம்பியார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அன்று முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சரத்பாபு சிநேகா தம்பதி கணவன் மனைவியாக வசித்து வந்தனர்.
இந்தத் திருமணம் மற்றும் சென்ற வாரம் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கிளம்பிய வதந்திகள் குறித்துப் பேசி வருத்தப்பட்டிருக்கிறார் தீபக். `சிநேகாம்மாவைக் கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி அவரே ஒரு பெரிய தொகையை அவங்ககிட்டக் கொடுத்துக் கல்யாணத்துக்குத் தேவையான நகை புடவையெல்லாம் வாங்கிக்கச் சொன்னார் சரத்பாபு சார். கல்யாணம் முடிஞ்சதும் அவர் எங்கிட்டச் சொன்ன முதல் வார்த்தை ’என்னை பாபுஜின்னே கூப்பிடு’ங்கிறதுதான். அதாவது அப்பான்னே கூப்பிடச் சொன்னார். சொன்னது மட்டுமில்லாம, தன்னுடைய மகனாகவே நினைச்சு என் மீது பாசம் காட்டினார்.
என்னுடைய திருமணத்தின் போதும் சில பிரச்னைகள் வந்தது. நானுமே ஒரு பைசா கூட வரதட்சனை வாங்காமத்தான் கல்யாணம் செய்தேன். ஆனா எனக்கு மனைவியா வந்தவங்க என் மீது வரதட்சனை புகார் சொல்லி கைது செய்ய முயற்சி பண்ணினாங்க. அந்த நேரத்துல எங்கம்மாவும் சரத்பாபு சாரும் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்.
பிறகு ஒருகட்டத்துல சரத்பாபு சாருக்கும் அம்மாவுக்கு டைவர்ஸ் ஆகிடுச்சு. ஆனாலும் அதுக்குப் பிறகுமே அம்மாவிடம் நலம் விசாரிப்பார். அக்கறையா இருந்தார். என்மீது எப்பவும் போல அதே பாசத்துடனேயே பழகினார். மொத்தத்துல மனுஷன் ரொம்பவே ஜென்யூன். தங்கமான மனிதர்.
ஆனா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவரைப் பத்தி வெளியில இருந்து யார் யாரோ என்னென்னவோ தவறான தகவல்களையெல்லாம் பேசினாங்க. ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.
மீடியாக்களும் சமூக வலைதளங்கள்லயும் அவசரப்பட்டு தப்பான தகவல்களை வெளியிட்டாங்க. அந்தச் சமயத்துலெல்லாம் ‘கடவுளே அப்பாவைக் காப்பாத்துன்னு வேண்டினேன்’ என உருக்கமாக வீடியோவில் பேசியிருக்கிற தீபக், தன் வாழ்வில் தன் சொந்த அப்பாவுக்கும் மேலாக உதவியிருக்கிற சரத்பாபுவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.