போர்ட் மோரெஸ்பி: ‘‘பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், உதவிகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
பப்புவா நியூ கினியில் இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எப்ஐபிஐசி) மாநாட்டை பிரதமர் மோடியும் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறையின் கீழ், ‘இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம்’ (ஐடிஇசி) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐடிஇசி அமைப்பு கடந்த 1964-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வளரும் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு முழு ஸ்காலர்ஷிப் உதவியுடன் சிவில் மற்றும் பாதுகாப்பு தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சிவில் மற்றும் பாதுகாப்பு துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், திட்டங்களை அமல்படுத்த உதவுதல், ஆலோசனைகள் வழங்குதல், ஆய்வுகள், கருவிகளை நன்கொடையாக வழங்குதல், இந்திய நிபுணர்களின் பங் கேற்பு, பேரிடர்களின் போது நிவாரண உதவிகள் வழங்குதல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கி ஐடிஇசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பசிபிக் தீவுகள் பிராந்தியத்தில் குக் தீவுகள், பிஜி, கிரிபடி, மார்ஷல் குடியரசு தீவுகள், மைக்ரோனேசியா, நவ்ரு, நியூ, பலவ், பப்புவா நியூ கினியா, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, துவலு, வனுவாடு ஆகிய நாடுகள் உள்ளன. இந்த 14 நாடுகளின் ஐடிஇசி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
பசிபிக் தீவுகள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக தலைவர்கள் உட்பட அனைவரும் அவரவர் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் உதவிகளை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காக உங்களை மனதார பாராட்டுகிறேன். உங்களுடைய பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
உயரிய விருதுகள் வழங்கி பிரதமரை கவுரவித்த நாடுகள்
பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் மிக உயரிய விருதான, ‘தி கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ என்ற விருதை அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா நேற்று வழங்கி கவுரவித்தார்.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உயரிய ஆர்டர் ஆப் பிஜி வழங்குவது மிகவும் அரிதானது. இந்த விருதை இந்திய மக்களுக்கும் பிஜியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை அளித்து வரும் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதேபோல் பப்புவா நியூ கினியும், ‘கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகுவு’ என்ற உயரிய விருதைப் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தது.
பசிபிக் நாடுகளின் ஒற்றுமை, ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக இந்த விருதை வழங்குவதாக பப்புவா நியூ கினி தெரிவித்துள்ளது.