2016-ம் ஆண்டு நவம்பரில், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாக புதிய 200, 500, 2,000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்காக, பல நாடுகளில் அதிக மதிப்புகொண்ட ரூபாய் தாள்களை அச்சிடுவதே இல்லை. ஆனால் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது அப்போதே பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டது.
தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1,000 தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்ற, ஏழை- எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் காத்திருந்து, ரூபாய் தாள்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
அந்த சமயத்தில் பணப்புழக்கம் சீர்குலைந்து தொழில்துறைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இயக்கிய லட்சக்கணக்கானோர் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். அதில் இருந்து மீண்டு வர சில மாதங்களேனும் தேவைப்பட்டது. அதையே மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ரூபாய் நோட்டுகள் தொடர்பான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கிறது.
அதாவது, புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் தாள்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால், இதனால் சாமானியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் பெரிதும் குறைவுதான்.
இருப்பினும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் மீது சாமானிய மக்களின் நம்பிக்கையை இந்நடவடிக்கை பெரிதும் கேள்விக்குட்படுத்தியுள்ளது என்கிறார்கள். இதுதொடர்பாக பொருளாதார வல்லுநர் சோம வள்ளியப்பனிடம் கேள்வி எழுப்பினோம். ”பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது புழக்கத்தில் இருந்த 86% ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டன. அதனால் குறுகிய காலத்தில் அதே அளவு பணத்தை புழக்கத்தில் விட முடியாது என்பதால்தான், 2,000 ரூபாய் என்ற உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டன.
இடைக்கால நடவடிக்கையாகத்தான் கொண்டு வந்தார்கள். ஆனால், 2019-க்கு பிறகு 2,000 ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படவில்லை. மக்களுக்கும் 2,000 ரூபாய் தாள்கள் மீது ஆரம்பத்தில் இருந்தே ஒருவித பயம் இருந்தது. வங்கிகளில் இருந்து 2,000 ரூபாய் தாள்கள் திரும்ப வெளியே வருவதில்லை என்பதையும் மக்கள் உணர்ந்தார்கள்.
அதனால் சாமானிய மக்கள், வியாபாரிகளுக்கு 2,000 தாள்களை திரும்பப் பெற்றது பெரிய தொந்தரவாக இருக்காது. பதுக்கி வைப்ப நினைப்பவர்களுக்கு மட்டுமே 2,000 ரூபாய் தாள்கள் உதவும். அளவுக்கு அதிகமாக 2,000 ரூபாய் தாள்களை டெபாசிட் செய்பவர்களை வருமான வரித்துறை நிச்சயம் கண்காணிக்கும். 2,000 ரூபாய் தாள்களை புழக்கத்தில் விட்டு 6 ஆண்டுகளுக்குள் மீண்டும் திரும்பப் பெறுவது என்பது செலவு, சிரமம்தான். ஆனால் இதுவும் 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் ஒரு தொடர் நடவடிக்கைதான். இதன் காரணமாக எல்லாம் பணத்தின் மீதான நம்பகத்தன்மை குறையாது. தற்போது 500 ரூபாய் மட்டுமே உயர் மதிப்பு பணமாக இருப்பதால், மீண்டும் 1,000 ரூபாய் தாள்களை அச்சடிக்க வேண்டியது அவசியமும் ஏற்படலாம்” என்றார்.