சென்னை: Vijay 68 (விஜய் 68) கஸ்டடி என்ற தோல்வி படத்தை கொடுத்தாலும் தனது அடுத்த பட இயக்குநராக வெங்கட் பிரபுவை விஜய் ஏன் ஓகே செய்தார் என்பது குறித்த காரணம் தெரியவந்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். காஷ்மீரில் முதல் ஷெட்யூல் முடிந்ததை அடுத்து சென்னையில் தற்போது ஷூட்டிங் நடந்துவருகிறது. ஜூன் மாதத்திற்குள் ஷூட்டிங்கை முடித்துவிட வேண்டும் என லோகேஷ் கருதுவதால் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோவின் அப்டேட் வெளியாகுமென ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 68 வெங்கட் பிரபு: லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் இப்போது தளபதி 68ஐ வெங்கட் பிரபு இயக்குவது உறுதியாகியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இது 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாமே சஸ்பென்ஸ்தான்: வெங்கட் பிரபு இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து எந்த மாதிரி ஜானரில் படத்தை வெங்கட் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. எப்போதும் ஜாலி ஜானரில் எடுக்கும் வெங்கட் பிரபு விஜய்யையும் அப்படி காட்சிப்படுத்தி ஒரு ட்விஸ்ட் வைத்து மங்காத்தா படத்தை தாண்டி பெரும் ஹிட் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் லியோ ஷூட்டிங் முடிந்த பிறகுதான் தளபதி 68 அப்டேட் வரும் என இயக்குநர் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்.
ஏன் வெங்கட் பிரபு?: வெங்கட் பிரபு விஜய்யை இயக்குவது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவரது கடைசி படமான கஸ்டடியின் ரிசல்ட் கொஞ்சம் கலக்கத்தை கொடுத்திருக்கிறது. இருப்பினும் விஜய் ஓகே சொல்லியிருக்கும் கதை பத்து மாதங்களுக்கு முன்னரே அவரிடம் சொல்லப்பட்டது என்றும். இந்தப் படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
விஜய் ஏன் ஓகே சொன்னார்?: இந்நிலையில் வெங்கட் பிரபுவை விஜய் ஏன் ஓகே செய்தார் என்பது குறித்த தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வெங்கட் பிரபுவிடம் விஜய் பத்து மாதங்களுக்கு முன்னரே கதையை கேட்டு ஓகே செய்துள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்வாங்கமாட்டார்: அதற்கு காரணம் விஜய் ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் அதிலிருந்து பின்வாங்கமாட்டார்.அந்த இயக்குநரின் முந்தைய படம் வெற்றியா தோல்வியா என்பதை பற்றியும் கவலைப்பட மாட்டார். தனக்கு கதை பிடித்தால் அந்த இயக்குநரின் இயக்கத்தில் விஜய் நடிக்க எந்த தயக்கமும் காட்டமாட்டார். உதாரணத்திற்கு ஏ.எல் விஜய் இயக்கி வெளியான தாண்டவம் திரைப்படம் தோல்வி அடைந்தாலும் விஜய் அவரின் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்தார்” என்றார்.