போபால்: மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் அங்குள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், பாஜக சீனியர் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றிவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன . தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழலில் பாஜகவுக்கு 130 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 96 பேர், 3 சுயேச்சைகள், ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் உள்ளன.
கடந்த 2018 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவானது. அதாவது யாருக்கும் 116 இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 114, பாஜக 109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி 1, சுயேச்சைகள் 4 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. கமல்நாத் முதல்வரானார். இவரது ஆட்சி ஓராண்டு நடந்தது.
இதற்கிடையே தான் முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவுக்கு தாவினார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததோடு, பாஜக ஆட்சியை பிடித்தது. சிவ்ராஜ் சிங் முதல்வரானார். மேலும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜ்யசபா எம்பியான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய அமைச்சரானார். இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளன. இந்நிலையில் தான் பாஜகவில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் சீனியர் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு டந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ள நிலையில் தான் மத்திய பிரதேச அரசியல் சூழல் பாஜகவுக்கு சிக்கலாக உள்ளது.
அதாவது சிவ்ராஜ் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலர் மீது அதிருப்தி உள்ளது. இதனால் அவர்களை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சீனியர் தலைவர்கள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானிடம் கூறியுள்ளனர். அதற்கு சிவ்ராஜ் சிங் சவுகான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிவ்ராஜ் சிங் ஒரு அணியாகவும், சில மூத்த தலைவர்கள் ஒன்றாக இணைந்து இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக செயல்பட வேண்டும் என சீனியர் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் மூலம் தான் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்த நிலையில் தான் இதனை சில தலைவர்கள் முன்வைத்துள்ளனர். மேலும் மத்திய பிரதேச பாஜகவினர் நேரடியாக இந்த பிரச்சனையை டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பொதுவாக காங்கிரஸ் கட்சியில் தான் கோஷ்டிகள் உருவாகும் என நாம் கேள்விப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது பாஜகவிலும் அத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதால் பிரச்சனை டெல்லி மேலிடத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில் தான் டெல்லி மேலிடம் மத்திய பிரதேசத்தில் நடக்கும் விவகாரங்களை தீவிரமாக கண்காணிக்க தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யலாமா? வேண்டாமா? என ஆலோசித்து வருகிறது.
தற்போது கடந்த 6 மாதத்தில் மட்டும் இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பாஜக தனது ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது. இன்னும் கூட இந்த ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்துடன் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தகயை சூழலில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கவும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் வெற்றி என்பது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். இதனால் பாஜக அடுத்த நடவடிக்கையை மிகவும் கவனமாக எடுத்து வைக்க உள்ளது.
அதன்படி மத்திய பிரதேச அரசியல் நிலவரத்தை நன்கு கவனித்த பாஜக மேலிடம் முதற்கட்டமாக கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றம் செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை புறம்தள்ளிவிட முடியாது. கடந்த 2005 முதல் 2018 வரை அவர் பாஜகவில் முதல்வராக இருந்தார். 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அவர் தலைமையில் பாஜக வென்றது. 2018 தேர்தலிலும் கூட பாஜக மயிரிழையில் தான் ஆட்சியை பறிகொடுத்தது. மேலும் சிவ்ராஜ் சிங் சவுகானையும் பாஜக மேலிடம் அலட்சியம் செய்யாது.
இப்படி பாஜகவில் சில குழப்பங்கள் நிலவும் நிலையில் தான் இதனை சாதகமாக பயன்படுத்தி மத்திய பிரதேசத்தை தனி மெஜாரிட்டியுடன் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி காய்நகர்த்தி வருகிறது. மேலும் மத்திய பிரதேச தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் வரை உள்ளன. இந்த காலக்கட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் மத்திய பிரதேசத்தின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு பாஜகவில் எப்படி இருக்கும் என்பதையும், அதற்கு பதிலாக காங்கிரஸ் மூவ் எப்படி அமையும் என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.