இன்று முதல் செப் 30 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்… இதுதான் வழிமுறை!

இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக கடந்த 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 -ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். அதுவரை செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

2,000 ரூபாய் நோட்டுகள்

ஆனால், இந்த அறிவிப்பு வெளியான உடனே மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றத் தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்களில், பெட்ரோல் பங்குகளில், கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் மக்கள் பதற்றமடைந்தனர்.

அறிவிப்பு வந்த ஒரு வாரத்தில் மட்டுமே சொமேட்டோவின் ஒட்டுமொத்த ஆர்டரில் சுமார் 72 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகளாக வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளனர் என்று சொமேட்டோ தெரிவித்துள்ளது.

“ரயில்வே சேவைகளை பெற, 2000 ரூபாய் நோட்டுகளை, பயணிகள் பயன்படுத்தலாம். ரயில்வே இதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், விதியை மீறி பணத்தை மாற்ற முயற்சி செய்யக் கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டு

டாஸ்மாக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டார்கள் என தகவல்கள் பரவியது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி “ அந்த தகவல் போலியானது” என விளக்கம் அளித்தார்.

பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்த நிலையில், “2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த எந்த தடையும் இல்லை” என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

ஆனால் நடைமுறையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதுதான் உண்மை. எனவே மக்கள் வங்கியில் மாற்றுவதுதான் சிறந்த வழியாக நினைகின்றனர்.

வங்கி நடைமுறைகள் என்ன?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  • பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் தனி கவுண்டர்கள் வசதி அமைக்க வேண்டும்

  • பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும்.

  • குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும்.

  • பொதுமக்கள் மாற்றும் 2,000 ரூபாய் நோட்டு வரவு தொடர்பான தினசரி தரவை கண்காணிக்க வேண்டும்.”

என்று வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளில் ஒருநாளைக்கு ஒருவர் ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் மாற்ற முடியும். அப்படி மாற்றுவதற்கான தனி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

அந்த படிவத்தில், வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு இருந்தால் கணக்கு எண் ஆகிய விபரங்களை பூர்த்திசெய்து, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் அசலைக் காட்ட வேண்டும்.

2,000 ரூபாய் நோட்டுகள்

வங்கியில் எந்த அடையாள அட்டையை காட்டுகிறோமோ, அதன் எண்ணையும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் வங்கியில் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செலுத்துகிறோம் என்பதையும் குறிப்பிட்டு, வாடிக்கையாளர் கையொப்பம் இட்டு விண்ணப்ப படிவத்தை அளித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும்.

வங்கி கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்கு 50 ஆயிரத்திற்கு மேல் செலுத்தும் நபர்கள் வருமான வரிக் கணக்கு காட்ட வழங்கும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். இது வழக்கமான நடவடிக்கைதான். வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு வேறு எந்த கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் எந்த வங்கிக்கும் சென்று 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அந்த வங்கியில் கணக்கு இருக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.