ஒரு நபரின் தனியுரிமைக்கும் அவரின் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செயற்படுமிடத்து, அது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால், அவற்றை உடனடியாக விசாரிப்பதற்கான விடே பிரிவொன்றை பாதுகாப்புப் பிரிவு தாபித்துள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குற்றச் செயல்கள், கொலைகள், வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றன ஊடகங்களால் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விசேட ஆலோசனைக் குழுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக் குழுவிற்கு ஊடகவியலாளர்களின் கருத்துக்களும் முக்கியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.