மும்பை : போதை பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஜூன் 8 வரை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள மும்பை நகரில் இருந்து கோவா சென்ற ‘கார்டிலியா’ சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் 2021 அக். 3ல்சோதனையிட்டனர்.
அதில் பயணித்த ‘பாலிவுட்’ நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றியதாக கூறப்பட்டது. ஆர்யன் கான் உட்பட பல இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை போதை பொருள் தடுப்பு பிரிவினர் நிரூபிக்க தவறியதை அடுத்து ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு பின் ஜாமின் அளித்தது.
இந்த வழக்கை அப்போதைய போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமை ஏற்று விசாரித்தார். ஆர்யன் கான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் இருக்க நடிகர் ஷாரூக்கானை மிரட்டி 25 கோடி ரூபாய் அவர் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து இவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்தும் தன்னை கைது செய்ய தடை கோரியும் முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய மே 22 வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இவரது மனு மீது பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமீர் வான்கடேவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டிக்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வான்கடே மனு மீது பதில் அளிக்க அவகாசம்கோரியது.
இதையடுத்து சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய ஜூன் 3 வரை அவகாசம் அளித்த நீதிமன்றம் வான்கடேவை கைது செய்ய பிறப்பித்த இடைக்கால தடையை ஜூன் 8 வரை நீட்டித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement