இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ஜூன் 1 2023 முதல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவது அவசியமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹாட்டி ஆகிய நகரங்களின் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தங்களின் மருந்து தயாரிப்புகளை முறையாக மத்திய அரசு ஆய்கங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் லிமிடட் அமெரிக்காவில் தனது தயாரிப்புகளை பயன்படுத்தியோருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஒட்டுமொத்த பேட்ச் மருந்துகளையும் திரும்பப் பெற்றது. அதேபோல் இந்திய இருமல் மருந்துகளை அருந்தியதால் காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஏற்றுமதி மருந்து தரம் குறித்து தீவிர கண்காணிப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.