உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது 63 பாடங்களுக்குமான மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேலும், 12 பாடங்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு உதவியாக நிற்கின்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்திற்கு, ஆசிரியர் சங்கத்திற்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலை விடுமுறை வழங்கும் காலத்திலும், இந்த விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், சாதாரண தரப்பரீட்சை முடிவடைந்ததுடன், அதன் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்…
“உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர். இம்மாதம் 29ஆம் திகதி முதல் 08ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அந்த காலக்கெடுவை முழுமையாகப் பயன்படுத்தி, ஜூன் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறைவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம். அதனைத் தொடர்ந்து சாதாரண தபப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.