எம்பியும், எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகடைப்பதை விமர்சிக்கும் விதமாக பதிவிட்டுள்ள பாஜக நிர்வாகி சௌதா மணியை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெண்கள் மீதான வன்முறை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாத நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்கிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் மௌனத்தின் துடிப்பு, பிறந்த குடில் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அண்மையில் இவர் சமூகத்தில் பெண்கள் எவ்வாறு கார்னர் செய்யப்படுகிறார்கள் என்பதை குறித்து பேசினார்.
அப்போது, பாலின அடிப்படையிலான வன்முறை எப்போதுமே அரசியல் மற்றும் சட்டபூர்வமானதாகவே இருந்து வருகிறது. உதாரணமாக திருமண பலாத்காரம் இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களைச் சிறப்பாகத் தீர்ப்பதற்கு, சுகாதார அமைப்பில் உள்ள விரிசல்களை நோக்கி நமது கவனம் சமமாகத் திரும்ப வேண்டும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் திறம்பட எதிர்த்துப் போராட, பெண்களின் உரிமைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பின்னடைவை எதிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. சமத்துவம் மற்றும் மனித கண்ணியம் ஆகியவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை கூறு என்று தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பாக பேசி இருந்தார்.
இந்த நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் டீ ஷர்ட், பேண்ட் அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், ஊடக பிரிவின் மாநில செயலாளருமான சௌதா மணி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘ என் உடை என் உரிமை’ என்று குறிப்பிட்டுள்ளார். இது நக்கல் ட்வீட் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், இதில் என்னை குற்றம் கண்டு பிடித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி பாஜக பெண் நிர்வாகியை சாடி வருகின்றனர்.