சிட்னி நகரில் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் யோகா, திரைப்படங்கள், கிரிக்கெட் போன்றவை இரு நாடுகளையும் ஒன்றிணைப்பதாக கூறினார்.
வேத மந்திரங்கள் ஒலித்த இந்த இடம் சிட்னி ஒலிம்பிக் பார்க். தமது வழக்கமான பாணியில் மிடுக்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் உற்சாகமாக கைகுலுக்கி அழைத்துச் சென்றார்.
பிரதமரை வரவேற்று ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் வண்ணமயமாக கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பாரம்பரிய நடனங்களும் இசை நிகழ்ச்சிகளும் பிரதமருக்காக அரங்கேற்றப்பட்டன.
பிரதமரை வரவேற்று பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ், மோடிக்கு கிடைத்துள்ள உற்சாக வரவேற்பை இதற்கு முன் தான் பார்த்ததில்லை என்றார். அந்த வகையில் மோடி தான் பாஸ் என்றார் ஆல்பனீஸ். அப்போது மோடி, மோடி என்ற முழக்கம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.
வரவேற்பை ஏற்றுப் பேசிய பிரதமர் மோடி, உலகின் வேகமாக வளரும் நாடு எது என்றும், உலகிலேயே செல்ஃபோன் தயாரிப்பில் 2-வது இடத்தில் உள்ள நாடு எது என்ற கேட்ட போது, இந்தியா, இந்தியா என்று முழங்கினர் குழுமி இருந்தவர்கள்.
பிரதமர் மோடியைக் காண ஆஸ்திரேலியா முழுவதும் இருந்து 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். மெல்பர்னில் இருந்து ஒரு குழுவினர் தனி விமானம் அமர்த்திக் கொண்டு சிட்னி வந்தனர். அரங்கில் திரண்ட பலரும் பிரதமருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.