மதுரை கப்பலூர் டோல்கேட்டில், ஃபாஸ்ட்டேக்கில் பணம் எடுத்த பின்னரும், ஏன் நீண்ட நேரம் காக்க வைக்கிறீர்கள் ? என கேட்ட கார் உரிமையாளரை, டோல்கேட் ஊழியர்கள் புரட்டியெடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே, சர்ச்சைக்கு பெயர்போன கப்பலூர் சுங்கச்சாவடியில் தான் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது…..
சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது குடும்பத்தினருடன், தென் மாவட்டங்களில் உள்ள ஆன்மீக மற்றும் சுற்றுலா தலங்களுக்கு காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பினார். மதுரை கப்பலூர் டோல்கேட்டிற்கு வந்தபோது, ஃபாஸ்டேக் உள்ள 4ஆவது பாதையில் காரை இயக்கியுள்ளார். அப்போது, அதில் ஃபாஸ்டேக் இயந்திர கோளாறு காரணமாக, 3ஆவது பாதைக்குச் செல்லுமாறு ஊழியர்கள் கூற, அங்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு, அவரது வாகனத்திற்கு முன்னால், ஒரு கார், ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாததால் வெகுநேரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்துள்ளது. பின்னர், ஒருவழியாக அந்த கார் சென்றவுடன், பிரபு தனது காரை நகர்த்தியுள்ளார். அப்போது, அவரது ஃபாஸ்ட்டேக் இணைக்கப்பட்டுள்ள கணக்கில் இருந்து இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கூறிய பின்னரும், அவரது காரை டோல்கேட் ஊழியர்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. டோல்கேட் ஊழியர்களிடம், இதுபற்றி பிரபு கேள்வி எழுப்ப, பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரபு தனது வாகனத்தை எடுக்க முற்பட, பெண் ஊழியர் ஒருவர், தகாத வார்த்தைகளால் வசைபாடியதோடு, அங்கிருந்த ஊழியர்களிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய பிரபுவை, சுங்கச்சாவடி ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். ஆவேசமாக ஓடிவந்த டோல்கேட் பெண் ஊழியர் ஒருவர், தன் பங்கிற்கு பிரபுவின் சட்டையை கிழித்து, தாக்குதல் நடத்திய காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறைகளின்படி, மாநகராட்சி எல்லையில் இருந்து 30 கி.மீ தூரத்திலும், நகராட்சி எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பாலும், டோல்கேட் அமைக்கப்பட்ட வேண்டும் என்ற விதியை மீறி கப்பலூர் டோல் கேட் அமைத்திருப்பது ஏன் ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மதுரை மாநகராட்சி எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும், கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவோம் என அனைத்துக்கட்சிகளும் அளிக்கும் வாக்குறுதி, காற்றோடு போய்விடுவதாக கூறும் திருமங்கலம் பகுதி மக்கள், எத்தனையோ போராட்டங்களை நடத்தியபோதும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை வழக்கு ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.