சிலாபம் களப்பை அழிவிலிருந்து பாதுகாக்க அமைச்சர் டக்ளஸ் விரைவான நடவடிக்கை

சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, கடற்றொழில் அமைச்சர்; டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று (22) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பின்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்…

களப்பு பகுதியில் மணல் நிறைந்து காணப்படுதல், அதனால் அப்பிரதேசத்தில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுதல், பண்ணைகளில் இறால் வளர்ப்பு செய்வோர் பயன்படுத்தும் நீர் மீண்டும் களப்புடன் கலக்கப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களால், குறித்த களப்புப் பகுதியில் மீன் மற்றும் இறால் இனப்பெருக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அவர்கள் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினர்.

மேலும் சிலாபம் பொது வைத்தியசாலை கழிவுப்பொருட்கள், நகர சபையின் குப்பைகூழங்கள் என்பன கலப்பில் கலக்கப்படுவதுடன், அப்பிரதேசம் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, நாரா மற்றும் நெக்டா நிறுவனங்களின் அதிகாரிகளிடம், நாளைய தினமே இவ்விடயம் தொடர்பாக உடனடியாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்வரும் சனிக்கிழமை குறித்த களப்புப் பகுதிக்கு நேரடி விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர்கள், நாரா, நெக்டா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.