புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2022) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
இஷிதா கிஷோர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர். இஷிதாவின் தந்தை விமானப்படை அதிகாரி. அவரின் தாயார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சகோதரர் ஒருவரும் இருக்கிறார், அவர் வழக்கறிஞர்.
26 வயதாகும் இஷிதா யுபிஎஸ்சி தேர்வெழுதுவது இது மூன்றாவது முறையாகும். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற கையோடு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிவந்தவர், கடந்த இரண்டு முறையும் தேர்வில் வெற்றி பெறவில்லை.
எனினும், முயற்சியை கைவிட விரும்பாத அவருக்கு அவரின் பெற்றோர்கள் ஊக்கமளிக்க ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் ஒன்பது மணி நேரம் படித்துவந்துள்ளார். அந்தக் கடின உழைப்புக்கேற்ற பலனாக மூன்றாவது முயற்சியில் இந்திய அளவில் முதல் ரேங்க் எடுத்துள்ளார்.
“எனது கடின உழைப்பின் பலன்தான் இந்த வெற்றி. முதல் ரேங்க் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கனவு நனவான தருணம் இது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் என்னால் தேர்ச்சி பெற முடியாமல் போனபோது என்னுடன் நின்ற எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவர்களே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர்.
உத்தரபிரதேச கேடரில் ஐஏஎஸ் பணிக்கு முன்னுரிமை அளித்துள்ளேன். ஐஏஎஸ் அதிகாரியான பிறகு பெண்கள் அதிகாரம் பெற பாடுபடுவேன்” என வெற்றி குறித்து பேசியுள்ளார் இஷிதா.
இஷிதா குறித்து கூடுதல் தகவல் ஒன்று…. அவர் ஒரு கால்பந்து வீராங்கனையும்கூட. தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2012ல் சுப்ரோடோ கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கிறார்.