எவ்ளோ பெரிய தண்டனை..? மாற்றுத்திறனாளியின் காலை உடைத்த போலீஸ் ஏட்டு பணி இடமாற்றம்.. வலுக்கும் எதிர்ப்பு

சென்னை:
மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் அவரது காலை போலீஸார் உடைத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானம் துளியும் இன்றி நடந்து கொண்டவர்களுக்கு டிரான்ஸ்பர் தான் தண்டனை என்றால், மற்ற போலீஸாருக்கு எப்படி பயம் வரும் என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ். 32 வயது ஆகிறது. இவர் பிறவிலேயே வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர் ஆவார். ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து தனது வாழ்க்கையை தள்ளி வருகிறார். இதனிடையே, கடந்த வாரம் தனது மோட்டார் சைக்கிளில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த கூவத்தூர் போலீஸார் இவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். இதில் அவர் மது அருந்தியது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்த போது அவர்களுடன் நாகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

உருவக்கேலியில் ஈடுபட்ட போலீஸார்:
அங்கு அவரை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், போலீஸாரை பார்த்து, “எதுக்கு என்னை அடித்தீர்கள்.. கேட்க ஆள் இல்லைனு நினைச்சிட்டீங்களா” என்று கோபத்தில் நாகராஜ் பேசினார். இதை போலீஸார் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில், நாகராஜை பார்த்து “டேய் குள்ளமனிதா”, “காமெடி பீஸ்”, “என் இடுப்பு சைஸ்தான் இருக்க” என்பன போன்ற உருவக்கேலி வார்த்தைகளை போலீஸார் பிரயோகிப்பதை கேட்க முடிந்தது.

காலில் மாவுக்கட்டு:
தன்னை உருவக்கேலி செய்ததால் நாகராஜ் மேலும் ஆத்திரத்தில் போலீஸாரை திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில்தான், இரு தினங்களுக்கு பிறகு நாகராஜ் காலில் மாவுக்கட்டு போட்டபடி மருத்துவமனையில் படுத்திருந்த புகைப்படம் வைரலானது. அதில் “பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு” என போலீஸ் தரப்பு விளக்கமும் இருந்தது.

“காலை உடைத்தது போலீஸ்தான்” :
இந்த சூழலில்தான், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாகராஜ், தன்னை ரைட்டர் உள்ளிட்ட 3 போலீஸார் தாக்கியதாகவும், பின்னர் தனது காலை உடைத்து ஆட்டோவில் அனுப்பி வைத்ததாகவும் கூறினார். இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

டிரான்ஸ்பர் ஒரு தண்டனையா?
இந்நிலையில், நாகராஜின் காலை உடைத்ததாக கூறி கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் ராஜசேகர், காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு வெறும் டிரான்ஸ்பர் தான் தண்டனை என்றால், மனித உரிமை மீறலில் ஈடுபட போலீஸார் யாரும் தயங்க மாட்டார்கள் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.