சிவகங்கை நகராட்சியில் பழைய பொருட்களை பெற்று ஏழைகளுக்கு வழங்கும் திட்டம் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் மக்களிடம் பழைய பொருட்களை பெற்று, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சியில் தினமும் 13.08 டன் குப்பை சேகரமாகின்றன. இதில் தேவையில்லாத குப்பைகளோடு, மீண்டும் பயன்படுத்தக் கூடிய பாடப்புத்தகங்கள், துணிகள், செருப்புகள், வீட்டு உபயோக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவையும் மக்கள் தூக்கிவீசுகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்களை பொதுமக்களிடம் பெற்று, அவற்றை ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை காந்திவீதி ராமசந்திரனார் பூங்கா அருகே நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார். ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் அயூப்கான், சேதுநாச்சியார், மதியழகன், வண்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தில் அப்படியே நேரடியாக பயன்படுத்தும் பொருட்களை, தேவைப்படுவோர் வந்து பெற்று செல்லாம். சிறிய குறைபாடுள்ள பொருட்களை சீர் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் கூறியதாவது: மீண்டும் பயன்படுத்த கூடிய புடவைகள், வீட்டு உபயோகப் பொருட்களை பொதுமக்கள் குப்பைகளுடன் சேர்த்து கொட்டுகின்றனர். இதனால் அவை பயன்படுத்த முடியாமல் வீணாகின்றன.

அவற்றை பயனுள்ளதாக்கி ஏழைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஊழியர்களை நியமித்து பழைய பொருட்களை வாங்கி வருகிறோம். அங்கேயை தேவைப்படுவோர் பொருட்களை வாங்கிச் செல்லாம். இத்திட்டம் முதற்கட்டமாக ஜூன் 5-ம் தேதி வரை செயல்படுத்தப்படும். மக்களின் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.