திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – திருமாவளவன் பேட்டி.,!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் மே மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ’’ பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகள் வெல்வதற்கு விசிக துணை நிற்கும்.
தேர்தல் நேரத்தில் திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைத் தொடர்பாக துறையின் அமைச்சர் மற்றும் முதல்வரிடம் வலியுறுத்தப்படும்’’ என்றுத் தெரிவித்தார்.