சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் ஸ்டாலின் மே 23-ம் தேதி (நேற்று) முதல் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், விமான நிலையத்துக்கு வந்த அவர், தனது வெளிநாட்டு பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
9 நாள் அரசுமுறைப் பயணம்
சென்னையில் வரும் 2024 ஜனவரி மாதம் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு, பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில், 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன்.
கடந்த 2022 மார்ச்சில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றேன். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
துபாய் பயணத்தின்போது ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15,100 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் ஷெராப் குழும நிறுவனம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோவையில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில் நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது. நிலம் கிடைத்ததும், கட்டுமான பணிகளை தொடங்க தயாராக உள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள முதலீடுகளை பொருத்தவரை, கடந்த 2021 ஜூலை முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதை முழுமையாக செயல்படுத்தும்போது, 4.12 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த அடிப்படையில்தான், இப்பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதுதான் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறேன். நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சந்திக்க உள்ளோம். ஒருசில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த பயணம் நிச்சயம் வெற்றிகரமாக முடியும்.அடுத்து வேறு எந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
பின்னர், அரசுமுறைப் பயணமாக முதல்வர்ஸ்டாலின், சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் முதல்வரை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
சிங்கப்பூரில் வரவேற்பு: சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.