வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை அன்று செய்தி பரவியது. பென்டகன் அலுவலக கட்டிடத்துக்கு அருகே வெடிவிபத்தால் கரும்புகை பரவுவது போன்ற படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து அன்றைய தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் சில நிமிடங்கள் கடும் சரிவு ஏற்பட்டது. 500 பில்லியன் டாலர் (ரூ.41 லட்சம் கோடி) அளவில் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்தது. பின்னர், அந்தப் படம் போலியானது என்று தெரியவந்தது. இதன் பிறகு பங்குச் சந்தை மீண்டெழுந்தது.
இந்தப் படம் ட்விட்டரில் நீல நிறக்குறியிட்ட உறுதிசெய்யப்பட்ட கணக்கு மூலம் பகிரப்பட்டதால், பலரும் இந்தச் செய்தியை உண்மை என்று நம்பினர். மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகி பங்குகளை விற்க ஆரம்பித்தனர். இதனால், சில நிமிடங்களுக்கு அமெரிக்கப் பங்குச்சந்தை கடும் சரிவுக்கு உள்ளானது.
இதையடுத்து, இந்தப் புகைப்படம் போலியானது என்பதை அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதி செய்தது. பென்டகன் அருகே எந்த வெடிவிபத்தும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்தது.
சாட்ஜிபிடி அறிமுகத்துக்குப் பிறகு ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த உருவாக்கங்கள் வேகமடைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால், போலிச்செய்திகள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டது போன்ற போலி புகைப்படம் பரவியது ஏஐ தொழில்நுட்ப பயன்பாடுகுறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.