இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என்றும், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என மத்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து, வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில்,வரும் ஜூன் 1-ம் தேதி முதல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவது அவசியம். மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கோல்கட்டா, சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களின் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
ஏற்றுமதியாளர்கள் தங்களின் மருந்து தயாரிப்புகளை முறையாக மத்திய அரசு ஆய்கங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய இருமல் மருந்துகளை அருந்தியதால் காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.