சென்னை:
திமுகவின் பெரும் புள்ளிகளை குறிவைத்து காய் நகர்த்தி வந்த மத்திய அரசு தற்போது தனது கவனத்தை அமைச்சர்
மீது திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை அமலாக்கத்துறை கையில் வைத்திருப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க மேலிட உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலாக அக்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு நெருக்கமான புள்ளிகள் ஆகியோருக்கு எதிராக பல ஐடி ரெய்டுகளும், அமலாக்கத்துறை சோதனைகளும் நடைபெற்று வந்தன.
அந்த சமயத்தில் இருந்தே, உதயநிதி ஸ்டாலினை நெருங்குவதற்கான வாய்ப்பை மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிர்நோக்கி காத்திருந்தன. ஆனால், தான் சம்பந்தப்பட்ட கணக்குகளை பக்காவாக வைத்திருந்ததால் உதயநிதியை அவர்களால் நெருங்க முடியவில்லை.
டார்கெட் உதயநிதி:
உதயநிதியை டெல்லி குறிவைப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக திமுகவை நிர்வகிக்க போவது உதயநிதி என்பது தெளிவாகிவிட்டது. எனவே, தங்களுக்கு அடுத்த நேரடி அரசியல் எதிரியாக இருக்கப் போவது உதயநிதி தான் என்பதை பாஜக முடிவு செய்துவிட்டது. அதேபோல, தேர்ந்த அரசியல்வாதியாக உதயநிதியின் செயல்பாடுகள் இருப்பதும் பாஜகவால் உற்று கவனிக்கப்படுகிறது
ஜி ஸ்கொயர் ரெய்டு:
எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது வரை அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும், முறைகேடு புகார்களும் இல்லை. உதயநிதியை இப்படியே விட்டால் தங்களுக்கு ஆபத்து என டெல்லி நினைப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உதயநிதியின் ‘மிஸ்டர் க்ளீன்’ இமேஜை உடைப்பதற்காவே சமீபத்தில் சில ரெய்டுகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை (ஐடி) ரெய்டு நடத்தியதும் உதயநிதியை குறிவைத்துதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
லைக்கா மூலம் காய்நகர்த்தல்:
அதேபோல, சில தினங்களுக்கு முன்பு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் அதுதொடர்பான 8-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. அண்மையில் வெளியான ஒரு பெரிய திரைப்படத்தின் விநியோக உரிமையை லைக்காவிடம் இருந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் அண்மையில்தான் வாங்கியது. இதில் ஏதேனும் வரி ஏய்ப்பு குளறுபடிகள் நடந்திருக்கிறதா என்பதை கண்டறியவே இந்த சோதனை நடைபெற்றதாம். இதில் இரு நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனராம்.
நெருங்கும் அமலாக்கத்துறை:
அதேபோல, லைக்கா நிர்வாகிகளிடமும் ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதிலும் பல முக்கியமான தகவல்களை அதிகாரிகள் சேகரித்திருப்பதாக தெரிகிறது. தற்போது இந்த ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி இதை செக் செய்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முறைகேடுகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதை வைத்து உதயநிதியை நெருங்க அமலாக்கத்துறை காத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.