மதுரை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது கோடைக்கால சுற்றுலா என விமர்சனம் செய்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
கடந்தமுறை முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை புதிதாக என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை முன் வைத்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்தகால வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
தற்போது கோடைக்காலம் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் டூர் போயிருக்கிறார் என்றும் அதில் தவறேதும் இல்லை எனவும் பிரேமலதா கிண்டல் அடித்தார்.
இதனிடையே சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) அதிபர்கள் / முதன்மைச் செயல் அலுவலர்களை முதல்வர் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சந்தித்து பேச திட்டம் வகுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.