உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை கிடையாது. இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (22) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதி உதவிகளின் போது மலையக சமூகம் ஓரங்கப்பட்டுகின்றது.

அவர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன என்ற பிரச்சாரத்தை எதிரணிகள் சில முன்னெடுத்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றன. முன்னர் இந்த குறைபாடு இருந்திருக்கலாம். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை உள்ளது, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன கிடைக்கின்றன எனக்கூறி கிராம அதிகாரிகளால் அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

இம்முறை அதிகாரிகள் நேரில் சென்று தகவல்களை திரட்டினர். எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. உதவிக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது நிச்சயம் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மலையக தமிழர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர் வரை பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்றனர். இவர்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களை முறையாக அடையாளம் காண வேண்டும். மாறாக முழு சமூகத்தையும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூகமாக அடையாளப்படுத்த முற்படுவது, அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். ஆகவே, முறையான வகையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 65 ஆயிரம் பேரில், 85 ஆயிரம் பேர் வரை பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது 52 வீதமாகும். பட்டியலில் குறைபாடுகள் உள்ளனவா என்பது பற்றி ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியிலும் ஈடுபடுகின்றோம். எனவே, மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.