புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பையும் கடந்து கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து முடிவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கின்றன. மே 28ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறப்பதை கண்டித்து விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன.
இதுகுறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சாவர்க்கர் பிறந்தநாளான மே 28 ஆம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கவிருக்கும் பிரதமர் மோடி, நாட்டின் குடியரசுத் தலைவர் முர்முவை புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார். இது சிங்காரித்து மனைவியில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகயுள்ளது. எனவே விசிக சார்பில் கண்டிப்பதுடன் இந்நிகழ்வைப் புறக்கணிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.