மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று நண்பகல் சென்னையில் இருந்து பிரபு என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் வந்த போது, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த பிரபு காரை நிறுத்திய போது, அந்த காரை மூன்றாவது வழித்தடத்தில் செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.அங்கு பிரபுவின் வாகனம் வந்தது. அப்போது பாஸ்ட்டேக்கில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்னரும் அவரது கார் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு திட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுக்க முயற்சித்த போது பெண் ஊழியர் பிரபுவிடம் வந்து தகாத வார்த்தைகளால் பேசி வாகனத்தை நிறுத்துமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் பிரபு காரில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சுங்கசாவடி ஊழியர்கள் பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காரில் இருந்த குடும்பத்தினர் வந்து தடுத்த போது அவர்களையும் 4 சுங்க சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதுகுறித்து சம்பவத்தை அறிந்த போலீஸார் பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை காரின் பின்புறம் இருந்த மற்றொரு வாகனத்தின் உரிமையாளர் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.