சென்னை: இளைஞர் ஒருவர் கல்யாணத்துக்கு பெண் தேடி கொண்டிருக்கிறார்.. இதுகுறித்து விளம்பரம் ஒன்றையும் தந்துள்ளார்.. அந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள் அப்படியே வாயடைத்து போயிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கை முறை காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது… குறிப்பாக உணவுகளை பொருத்தவரை ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.
அதேபோல, தொற்று நோய்கள், சுகாதாரமற்ற சூழ்நிலைகள், தூக்கமின்மை, வேலை நேரம் மாற்றம் என அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது.
மாற்றம்: இதுபோன்ற மாற்றங்களினால் மனிதர்கள் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர்.அதிலும், குறிப்பாக சமீபகாலமாகவே, இளம் வயதினருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருவதோடு, மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகிறது…
சிறுவயது மரணங்கள்: கபடி விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரும் சரி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோதே சரிந்து விழுந்த இளைஞரும் சரி, ஆன் தி ஸ்பாட்டிலேயே உயிர் பிரிந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. கடந்த மாதம் சிறுவன் ஒருவன் டான்ஸ் ஆடிக்கொண்டே சரிந்துவிழுந்து இறந்தான்.. 4 நாட்களுக்குமுன்புகூட, தெலங்கானாவில் 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தான்.. அதுவும், அவனது பிறந்த நாள் அன்றே இறந்துவிட்டான்.. கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் இறந்துவிட்டார்..
மாரடைப்புக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. அதேசமயம், கொரோனாவுக்கு பிறகே இந்த மாரடைப்புகள் அதிகமாகி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. அதிலும், கொரோனா தடுப்பூசிகள் தான் இப்படி மாரடைப்பை ஏற்படுத்துவதாக, பொதுமக்களிடமும் பீதி கலந்த பேச்சு நிலவியபடியே உள்ளது. இதற்கு எத்தனையோ முறை அரசு பல்வேறு விளக்கங்களை சொல்லி உள்ளது.. விழிப்புணர்வுகளை நடத்தியுள்ளது..
விளக்கங்கள்: எனினும், சிலரிடம் இன்னும் கலக்கம் நீங்கவில்லை.. இதனிடையே, பிரிட்டனின் பிரபலமான இதயநோய் டாக்டர் அசீம் மல்ஹோத்ரா என்பவர், “கோவிஷீல்டு தடுப்பூசி இதயத்துக்கு செல்லும் ரத்தத்தை உறையச் செய்வதால் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம்” என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.. இதை கேட்டதும், மேலும் கலக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில், இளைஞர் ஒருவர், வித்தியாசமாக விளம்பரம் ஒன்றை தந்துள்ளார்.. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.. அதனால், பெண் தேடி கொண்டிருக்கிறார்.. மணமகள் தேவை என்று விளம்பரம் தந்துள்ளார். அந்த விளம்பரத்தில், “கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த கொரோனா வேக்ஸின் போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை” என்று கேட்டுள்ளார்..
கண்டிஷன்: இந்த விளம்பரத்தை தினசரி நாளிதழில் தந்துள்ளார்.. பேப்பரில் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள், அதை எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அதுதான் வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..
“இதெல்லாம் ஒரு கண்டிஷனா? இன்னும் 80ஸ் கிட்ஸ் போலவே இருக்கியேப்பா.. பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம், இப்படியெல்லாம் பஞ்ச் வைத்தால் கல்யாணம் ஆன மாதிரிதான் என்று கமெண்ட்களை பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், தம்பி, இந்த கண்டிஷனை இப்போது போட்டு என்ன பிரயோஜனம்.. இருந்தாலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம்.. வாழ்த்துக்கள் என்று ஆதரவு தந்து வருகிறார்கள்.