புதிய நாடாளுமன்றத்தை சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்ற அறிவிப்பு வெளியான நாள்முதல் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை, சாவர்க்கர் பிறந்தநாளில் எதற்கு, மோடி திறக்கக் கூடாது என இதைச்சுற்றியே பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்துவந்தன. இன்றுகூட, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
இதுவொருபக்கமிருக்க, புதிய நாடாளுமன்ற அவையில் செங்கோல் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சித் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், `2026-க்குப் பிறகு மக்கள்தொகை வளர்ச்சியைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருப்பது குறித்துப் பேசிய குலாம் நபி ஆசாத், “புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் எந்தக் கட்சி பங்கேற்கிறது, எந்தக் கட்சி புறக்கணிக்கிறது என்பது குறித்து நான் கருத்து சொல்லத் தேவையில்லை. இதைப் பற்றி எதுவும் கூறமாட்டேன் நான். இதில் பங்கேற்பது அல்லது புறக்கணிப்பது என்பது அவர்களின் விருப்பம். 1991-92ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட யோசனை உருவானது. அப்போது சிவராஜ் பாட்டீல் மக்களவை சபாநாயகராகவும், நான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்தேன்.
அப்போது, புதிய நாடாளுமன்றத்துக்கான திட்டத்தை உருவாக்கி விரிவான விவாதங்களை மேற்கொண்டோம். பின்னர் புதிய மற்றும் பெரிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பதற்கான அவசியத்தைப் பிரதமருடன் விவாதித்தோம். ஆனால், பல்வேறு காரணங்களால் அது அப்படியே போடப்பட்டுவிட்டது. இப்போது, ஒரு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல விஷயம். 1952-ல் நடந்த தேர்தலுக்குப் பிறகு மக்கள்தொகை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் 2026 வரை நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. ஆனால், 2026-க்குப் பிறகு மக்கள்தொகை வளர்ச்சியைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.