காலத்தின் தேவையறிந்த உதவிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு
சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட, மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 128 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக 27,000 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 150 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….
இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வரும் கலாசார மற்றும் நட்புறவு காரணமாக சீனா எமது நாட்டுக்கு பெருமளவில் உதவிகளை செய்து வருகின்றது. அதனடிப்படையில் இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக, காலத்தின் தேவையை அறிந்து விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஒரு தொகை டீசல் வழங்கப்பட்டது. தன்னுடைய வேண்டுகோளுக்கு அமைய, தற்போது டீசலுக்கு பதிலாக கடற்றொழிலாளர்களுக்கு சீனத் தூதுவர் தலைமையில் மண்ணெண்ணெய் வழங்கக் கிடைத்தமைக்காக தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்…
இலங்கையில் கடற்றொழிலாளர்கள் தினமும் 5000 முதல் 10,000 ரூபா வரை மண்ணெண்ணெய்க்காக செலவிடுகின்றனர். அச் செலவைக் குறைப்பதற்காக இலங்கையிலுள்ள தனியார் நிறுவனமொன்று மின் கலத்தினால் இயங்கும் படகு இயந்திரங்களை தயாரித்து வருகின்றது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட இயந்திரத்தை சீனத் தூதுவரின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ் இயந்திரத்தின் செயற்றிறனை மேலும் மேம்படுத்துவதற்கு உதவ வேண்டுமென சீனத் தூதுவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அத்துடன், பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிரதேசமாக மாற்றுவதற்காக சீனாவின் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த உரையாற்றுகையில்…
சீனா எமது நாட்டுக்கு பெருமளவு உதவி செய்யும் நாடாகும். எமது நாடு தற்போது முகங்கொடுத்து வரும் பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக மென்மேலும் சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹொங்…
சீனாவும் இலங்கையும் நீண்டகாலமாக சிறந்த நட்புறவுடன் செயற்பட்டு வருகின்ற நாடுகள் ஆகும். அந்த உறவுகளை தொடர்ந்து பேணுவதற்கு தாம் பாடுபடப் போவதாகவும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு படகு, வலைகள் மற்றும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.