ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30 வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம், அல்லது டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது. அதன்படி, வங்கிகளும் 2,000 ரூபாய் நோட்டுகளை நேற்றுமுதல் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
“ஒரு நபர் ஒரே நேரத்தில் பத்து 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு எந்தவொரு படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை; எந்தவொரு அடையாள ஆவணத்தையும் வழங்க தேவையில்லை; பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமின்றி, எந்தவொரு வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்” என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்த அறிவிப்பால் பலரும், ஆவணங்கள் இல்லாமல் பணத்தை மாற்றிக்கொள்ள வங்கிக்கு சென்றனர். ஆனால் ஏற்கனவே உள்ள விதிகளின்படி, கே.ஒய்.சி. என்ற வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்டுப் பெறலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறிஇருந்தது.
இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வருவோர் ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை, பாஸ்போர்ட் ஆகிய 6 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என்று வங்கி தரப்பில் வலியுறுத்தினர்.
வங்கியில் எந்த அடையாள அட்டையைக் காட்டுகிறோமோ, அதன் எண்ணையும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் வங்கியில் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்துகிறோம் என்பதையும் குறிப்பிட்டு, வாடிக்கையாளர் கையொப்பம் இட்டு விண்ணப்ப படிவத்தை அளித்த பின்னர்தான் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடிகிறது.
ஆனால் கே.ஒய்.சி. பற்றிய விவரங்கள் தெரியாமல் மக்கள் பலரும் அடையாள ஆவணங்களை எடுத்து செல்லாமல், வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதுகுறித்து தெளிவான அறிவிப்பை ஏன் வெளியிட வில்லை. என்று வங்கி அதிகாரிகளிடம் வாதம் செய்வதை பார்க்க முடிகிறது. ரிசர்வ் வங்கி அறிவித்தது ஒன்று, நடைமுறை வேறு ஒன்றாக உள்ளதே என பலரும் வலைதளங்களில் கூறிவந்தனர்.
ஆனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் அடையாள விவரங்கள் ஏற்கனவே வங்கியிடம் இருக்கும் என்பதால் அவர்களால் எளிதாக மாற்றிக்கொள்ள முடிகிறது. அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் வங்கித் தரப்பில் இருந்து கேட்பதில்லை.
விதிமுறைகளை பின்பற்றுவதில் பல வங்கிகளில் முரண்பாடுகளை காண முடிகிறது. என்ன செய்யலாம் என்று கேட்டோம். பெயர் கூற விரும்பாத வங்கியாளர் கூறுகையில்,
“இப்போது பெரும்பாலும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கும். அதனால் கணக்கு உள்ள வங்கியில் பணத்தை மாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. படிவத்தில் வங்கி கணக்கு எண், எத்தனை 2000 ரூபாய் மாற்றுகிறோம் என்ற விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ வங்கிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை என்பதே உண்மை.
ஒருவேளை வங்கிக் கணக்கு இல்லை என்றால், ஆதார், பான் என குறிப்பிட்ட ஆறு ஆவணங்களில் ஏதாவது ஒன்று கொண்டு செல்வது நல்லது. பல வங்கிகளில் கண்டிப்பாக இந்த ஆவணங்களை கேட்கிறார்கள்.
கடந்த முறை பணத்தை மாற்றிய பிறகு பல கேள்விகளை வங்கித் தரப்பில் சந்திக்க வேண்டி இருந்தது. அதனால் விதிமுறைகளை பின்பற்றியே பணத்தை மாற்றுகிறோம். சில வங்கியின் ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன, அதில் தாரளமாக மாற்றிக்கொள்ளலாம்.” என்றார்.