ஜெனீவா: ”கொரோனா பெருந்தொற்று பரவலை விட மிக கொடிய நோய் தொற்றுகள் உலகம் முழுதும் பரவ உள்ளன. இவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்,” என, உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் 2019, டிச., மாதம், சீனாவில் துவங்கியது. அது படிப்படியாக உலகம் முழுதும் பரவி, இரண்டு ஆண்டுகளுக்கு உலகையே முடக்கியது.
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின், தொற்று பரவல் படிப்படியாக குறைந்து இப்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் அடுத்த எச்சரிக்கையை விடுத்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, உலக சுகாதார சபையின் 76வது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் கூறியதாவது:
சர்வதேச சுகாதார அவசரநிலை என்ற கட்டத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும், சர்வதேச சுகாதார அச்சுறுத்தல் என்ற நிலை இன்னும் தொடர்கிறது.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் புதிய உருமாற்றம் நிகழ உள்ளது. அது, மிகப் பெரிய அளவில் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த கூடும். அதோடு, வேறு சில நோய் தொற்றுகளும் பரவும் அபாயம் உள்ளது.
இவை, கொரோனாவை விட கொடிய பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். இவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement