கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி மே 26-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மே 26-ம் தேதி தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடக்க உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி மே 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, நடவு செய்யப்பட்டுள்ள ஒரு லட்சம் மலர்ச் செடிகள் தற்போது பல வண்ணங்ளில் பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
நாளை நடக்க உள்ள தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அரசு முதன்மை செயலாளர் மணிவாசகன், வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, தோட்டக்கலை இயக்குநர் இரா.பிருந்தாதேவி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கோடை விழாவில் சுற்றுலாத்துறை மூலமாக மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மே 28-ம் தேதி பட்டிமன்றமும், மே 30-ம் தேதி படகு போட்டியும், மே 31-ம் தேதி கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சியும், ஜூன் 1-ம் தேதி படகு அலங்கார போட்டியும் நடக்க உள்ளது. மேலும் கலைப் பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.