புதுடெல்லி: சுதந்திரத்தின்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால மாதிரி செங்கோலை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர நிறுவ உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டனால் வழங்கப்பட்டது இந்த செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்தின்போது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் வகையில் எவ்வாறு விழா நடத்தலாம் என, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்கும் நேருவிடம், மவுன்ட் பேட்டன் கேட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து, நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியிடம் நேரு ஆலோசனை கேட்டார். தமிழ் பாரம்பரிய முறைப்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர் பதவி ஏற்கும்போது அவரிடம் செங்கோலை ஆன்மீகத் தலைவர் ஒப்படைப்பது வழக்கம் என ராஜாஜி தெரிவித்தார்.
இதையடுத்து, செங்கோல் தயாரித்து வழங்கும் பொறுப்பு, ராஜாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சோழர் கால மாதிரி செங்கோல் தயாரிக்கும் பணியை சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை மேற்கொண்டது. 5 அடி உயரம் கொண்ட செங்கோலின் மேல் பகுதியில் நீதியின் அடையாளமாக திகழும் நந்தி சிலை இடம்பெற்றது.
இந்த செங்கோலை ஒப்படைக்கும் விழா கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை 12 மணி ஆவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நடந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த செங்கோல், தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ளது.
இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டபோது, ‘‘செங்கோலின் வரலாற்று முக்கியத்துவம் பலருக்கு தெரியாது. கலாச்சார பாரம்பரியத்தை நவீனமயமாக்கத்துடன் தொடர்பு படுத்தும் வகையில் இந்த செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார். இதை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம். இந்த நிகழ்வு நமக்கு வரலாற்றை நினைவுபடுத்தும்’’ என்று கூறினார்.