ஜார்ஜ்டவுன், கயானாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 வயது சிறுவன் மற்றும் 18 மாணவியர் பலியான விவகாரத்தில், இங்கு தங்கியிருந்த மாணவி ஒருவரே தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது-.
தென் அமெரிக்க நாடான கயானாவில் உள்ள மாஹ்தியா நகரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள மாணவியர் விடுதியில், சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், விடுதி காப்பாளரின் 5 வயது மகன் மற்றும் விடுதியில் தங்கியிருந்த 18 மாணவியர் பலியாகினர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், விடுதியில் தங்கி இருந்த மாணவி ஒருவரே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது-.
இது குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெரால்டு கவுவியா கூறியதாவது:
விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு, வெளிநபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த விடுதி காப்பாளர், பெண்ணை திட்டியதுடன், அவரின் மொபைல் போனை பறித்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவி விடுதியை தீ வைத்து எரித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த மாணவியும் தீயில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்ததும், கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவார். அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement